செய்திகள்

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது: 176 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்தனர்

குஜராத் மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், குஜராத் சட்டசபையில் நடந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, அண்மையில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிடுகின்றனர். 3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால், அகமது பட்டேலை தோற்கடிக்க பா.ஜ.க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே, குஜராத் சட்டசபையில் இன்று காலை தொடங்கிய மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று காலை முதலே வாக்களித்து வந்தனர்.

இந்நிலையில், மொத்தம் உள்ள 176 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்த நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்தது என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வெயின் கூறுகையில், “குஜராத் சட்டசபையில் நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் மொத்தம் உள்ள 176 எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்துள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT