செய்திகள்

பொள்ளாச்சி அருகே டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நகை திருட்டு

பொள்ளாச்சி அருகே டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 60). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பொள்ளாச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த தங்க நாணயம், வளையல், கம்மல் மோதிரம் உள்பட 10 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ராமலிங்கம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கம், வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.