கோவை:
பொள்ளாச்சி செரீப் காலனியை சேர்ந்தவர் அமானுல்லா (வயது 25). இவர் கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் அமானுல்லா சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்தார். மேலும் அமானுல்லாவின் நண்பர்களும் சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த பாலியல் துன்புறுத்தலால் மனவேதனை அடைந்த சிறுமி நடந்த சம்பவங்களை தனது தந்தையிடம் கூறினார். அவர் இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெவ்வேறு காலகட்டத்தில் 10 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி தெரிவித்தார்.
இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அமானுல்லா, ஆண்டாள் அபிராமி நகரை சேர்ந்த பகவதி (26), ஊத்துக்குழியை சேர்ந்த முகமது அலி (28), அழகாபுரியை சேர்ந்த டேவிட் செந்தில் (30), செரீப் காலனியை சேர்ந்த முகமது ரபீக் (28), மடத்துகுளத்தை சேர்ந்த அருண் நேரு (28), குமரன் நகரை சேர்ந்த சையது முகமது (25), சி.டி.சி. காலனியை சேர்ந்த இர்ஷத் முகமது (28), இர்ஷத் பாஷா (28) ஆகிய 9 பேரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதியை சேர்ந்த பெயிண்டர் பிரபு என்கிற மணிகண்டன் (22) என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு சிவக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தெப்பக்குளம் வீதி ஆட்டோ நிறுத்தம் அருகில் பிரபு பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று பிரபுவை கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.