செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யூ-டியூப் நிறுவனத்துக்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம்

பொள்ளாச்சி விவகாரத்தில் அண்மையில் வெளியான ஆடியோவின் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு, அந்த ஆடியோவை பதிவு செய்தவரின் தகவலை பெறுவது தொடர்பாக யூ டியூப் நிறுவனத்திற்கு சிபிசிஐடி மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. #PollachiCase #Youtube #CBCID

மாலை மலர்

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் வீடியோக்கள் பேஸ்புக், வாட்ஸ்-அப், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவுவதை தடுக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப், பேஸ்புக், வாட்ஸ் -அப் நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யூ-டியூப்பில் மீண்டும் ஒரு ஆடியோ பரவியது. அதில் பொள்ளாச்சி கும்பலால் பாதிக்கப்பட்டவர் என கூறி ஒரு இளம்பெண் பேசினார்.

இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் யூ-டியூப் நிறுவனத்துக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆடியோவை யூ-டியூப்பில் பதிவு செய்தவர் பற்றிய தகவலை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.