தினமும் தினத்தந்தி படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை 2 கோடியே 31 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தினசரி செய்தி பத்திரிகைகளை எத்தனை வாசகர்கள் படிக்கிறார்கள் என்பதை ஆய்வு நடத்தும் எம்.ஆர்.யு.சி. நிறுவனம் 2017-ம் ஆண்டிற்கான ஆய்வில் இந்தி அல்லாத மாநில மொழி பத்திரிகைகளில் இந்தியாவிலேயே முதல் இடத்தை 2.31 கோடி வாசகர்களை தினத்தந்தி பெற்றிருப்பதாக முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இத்தகைய சாதனை படைத்த தினத்தந்தி குழுமத்தை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இதை தினத்தந்திக்கு கிடைத்த பெருமை என்பதை விட, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன்.
‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்று நாமக்கல் கவிஞர் கூறிய வார்த்தைகளுக்கு ஏற்ப ‘தினத்தந்தி’ என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறுகிற அளவிற்கு சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் சமுதாயத்தில் நாளேடு படிப்பது என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்றி, சாதாரண அடித்தட்டு மக்களும் படிக்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கிய பெருமை தினத்தந்தி நிறுவனர் அமரர் சி.பா. ஆதித்தனாருக்கு உண்டு.
அந்த பாரம்பரிய பெருமையை சற்றும் குறையாமல் காப்பாற்றிய பெருமை அவரது மகன் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கும் உண்டு. கடந்த கால பெருமைகளை வாழையடி வாழையாக காப்பாற்றி பீடுநடை போட்டு வருகிற மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனையும் பாராட்டுகிறேன். தினத்தந்தி குழுமத்தின் சாதனை மிகுந்த பத்திரிகை பணி தொடர்ந்து வெற்றி மேல் வெற்றிகளை குவிக்க என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் வாழ்த்துகிறேன். மேலும் தினத்தந்தி குழுமம் இத்தகைய சாதனைகளைப் படைக்க அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தினத்தந்தி ஆசிரியர் குழு, நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சி.பா. ஆதித்தனரால் தொடங்கப்பட்ட தினத்தந்தி, முதல் இடம் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்குரியது. தினத்தந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து இருப்பதால் இப்போது 2 கோடியே 31 லட்சத்து 49 ஆயிரம் வாசகர்களை கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தி மொழி பத்திரிகைகள் அல்லாத பிற மொழி பத்திரிகைகளில் தமிழ் மொழியில் வெளி வருகின்ற தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்திருப்பது பெருமைக்குரியது, மகிழ்ச்சி அளிக்கிறது. ‘தினத்தந்தி குழுமத்தின் அர்ப்பணிப்பு உணர்வால் தற்போது தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்திருப்பது தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கின்ற பெருமை என்று தான் நான் கருதுகிறேன். இந்த உயர்வுக்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தினத்தந்தி நாளிதழுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தினத்தந்தி முதலிடத்தை பிடித்து இருப்பது தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பெருமைக்குரியது. சி.பா. ஆதித்தனார் காலம் தொடங்கி, டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் காலத்திலும் தற்போது சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் தலைமை ஏற்று நடத்தும் தினத்தந்தி அந்தந்த காலத்திற்கேற்ப வாசகர்களின் தேவையறிந்து பத்திரிகை துறையை மெருகேற்றி வருவது வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழர் தந்தை ஆதித்தனார் பெரும் போராட்டத்திற்கிடையில் பெருங்கனவுடன் தொடங்கிப் பவள விழா கண்ட தினத்தந்தி தன் பவளவிழா ஆண்டில் 2.31 கோடி வாசகர்களைக் கொண்ட நாளிதழாக உயர்ந்து நிற்பதில் தமிழ்ச் சமூகம் பெருமகிழ்ச்சியும் பெரு உவகையும் அடைகிறது. ஓர் நாளிதழ் பவள விழா காண்பதே சாதனை அந்த ஆண்டில் தொடர்ந்து பயணித்து முதல் நாளிதழாக வந்திருப்பது இதற்கு முன்னரும் இனியும் இவ்வுலகில் யாருமே நிகழ்த்த இயலாத சாதனை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொழிலதிபரும், வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்தின் தலைவருமான வி.ஜி.சந்தோஷம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தி ஒப்பு உயர்வற்ற உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. பாமர மக்கள் முதல் படித்தவர் வரை தினத்தந்தியை படித்து அதில் உள்ள செய்திகளை நன்கு அறிந்து வருகிறார்கள். 2 கோடியே 31 லட்சம் வாசகர்களை பெற்ற தினத்தந்தியின் இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் தினத்தந்தியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பணிவான வாழ்த்துக்கள். மேலும் தினத்தந்தி இன்னும் உயர்ந்த, சிகரத்தை எட்டும் என்று வாழ்த்தி இந்தியாவின் நம்பர் 1 நாளிதழ் என்பதை எண்ணி பெரிதும் பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்து ரமேஷ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘2 கோடியே 31 லட்சம் வாசகர்கள் படிக்கும் நம்பர் 1 பிராந்திய மொழி பத்திரிகை பவள விழா நாயகன் தினத்தந்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். உலக தமிழர்கள் பெருமை கொள்ளும் வகையில் சரித்திர சாதனை படைத்திருப்பதை மனதார வாழ்த்துகிறோம்’ என்று கூறியுள்ளார்.