கரூர்:
கரூர் மாவட்டத்தில் வருகிற 19-ந்தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் தெரிவித்ததாவது:-
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 19-ந்தேதி நடத்தப்படவுள்ளது. 1.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 836 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியார்கள் என மொத்தம் 3,300 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாம்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், சிக்னல்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சுங்கச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவ்வழியே பயணம் செய்யும் பயணிகளிடம் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு சொட்டு மருந்து வழங்க வேண்டும். போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புற மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும்.
மகாத்மகா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்களிடமும், சுய உதவிக்குழுவினரிடமும் இத்திட்டம் குறித்து எடுத்துக்கூறி அவர்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் போலியோ சொட்டு மருந்து வழங்குவது குறித்து எடுத்துரைக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
அனைத்து அங்கன்வாடி மையங்கள், மழலையர் பள்ளிகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளிகளில் பயிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுவதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதி செய்யவேண்டும். சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.
கரூர் மாவட்டத்தை பொறுத்த வரை 5 வயதிற்குட்பட்ட எந்தவொரு குழந்தையும் விடுபடாத வகையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்வகுமார், நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.