செய்திகள்

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலில் சிக்கி போலீஸ்காரரின் 2 கால்கள் துண்டானது

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலில் சிக்கி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரரின் கால்கள் துண்டானது.

மாலை மலர்

அரக்கோணம்:

திருவள்ளூர் மணவாளன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 57. இவர், அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இன்று காலை, அவர் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு பணிக்கு வந்தார்.

டிக்கெட் பரிசோதகருடன் செல்வதற்கு, சீனிவாசனுக்கு பணி ஒதுக்கப்பட்டது. அப்போது, வேலூர் கண்டோண்மென்ட்டில் இருந்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்ற பயணிகள் ரெயில், 2-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டது.

போலீஸ்காரர் சீனிவாசன், ஓடி சென்று அந்த ரெயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது, தவறி கீழே விழுந்ததில் பிளாட் பாரம் மற்றும் ரெயிலுக்கு இடையே இடிபாடுகளில் சிக்கியதில் அவரது 2 கால்களும் துண்டானது.

துண்டான 2 கால்களும் பிளாட்பாரத்தில் விழுந்தது. சீனிவாசன் அலறி துடித்தார். இதையடுத்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார், சீனிவாசனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ் பத்திரியில் அனுமதித்தனர்.

மேல் சிகிச்சைக்காக பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ரெயில்வே போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.