புதுடெல்லி:
டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடியாகவும் பல வழக்குகளில் தொடர்புடையவராகவும் அறியப்படும் மோனு தரியாப்பூர் என்பவரது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக புறநகர் டெல்லியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு மோனு புறப்பட்டு சென்றார். அவருக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டிருந்த இரு போலீசாரும் உடன் சென்றனர். அப்போது ஒரு கார் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் மோனு மீதும் அவரது நண்பரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.
இந்த அதிரடி தாக்குதலில் மோனு தரியாப்பூர் மற்றும் அவரது நண்பர் அருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாதுகாப்புக்கு சென்ற இளநிலை உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் என்பவரும் பலியானார். படுகாயமடைந்த காவலர் குல்தீப் என்பவர் குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.