நெல்லை:
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. பழங்கள் மொத்த வியாபாரி. இவரது மனைவி காந்திமதி. கடந்த வாரம் இவர் வீட்டில் தனியாக இருந்த போது 2 மர்ம வாலிபர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் முகத்தில் கருப்பு துணி கட்டியுள்ளார். 2 பேரும் அரிவாளால் காந்திமதியை வெட்டியும், சித்ரவதை செய்தும், வீட்டில் இருந்த இரும்பு பெட்டி சாவியை அபகரித்து, அதில் இருந்த 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான், உதவி கமிஷனர் எஸ்கால், நெல்லை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது போல் ஒரு காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும், அந்த கொள்ளைக்கும் தொடர்பில்லை என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கதுரை வீட்டில் முன்பு ஒரு இளம்பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண் காதல் திருமணம் செய்ததை தொடர்ந்து வேலையை விட்டு நிறுத்தி விட்டார்களாம். அந்த பெண்தான் அந்த வீட்டின் விபரத்தையும், நகைகள் இருக்கும் இடம் உள்பட பலவற்றை தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.
தற்போது அந்த உறவினர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் அவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தான் அடையாளம் தெரியாமல் இருக்க முகத்தை கருப்பு துணியால் மறைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
மேலும் கொள்ளையர்களில் ஒருவன், காந்திமதியின் உறவினர் ஒருவர் பெயரை சொல்லி கதவை திறக்க கூறியுள்ளார். அந்த உறவினர் பெயரையும் அந்த இளம்பெண் தான் கொள்ளையர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் போலீசார் கொள்ளையர்களின் வீடுகள் மற்றும் மறைவிடங்களில் அவர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்களின் இருப்பிடங்கள் தெரிந்த சிலரையும் பிடித்து கொள்ளையர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் முக்கிய கொள்ளையர்கள் 3 பேர்களும் போலீசில் சிக்கி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.