செய்திகள்

விழுப்புரம் அருகே மணல் கடத்திய 2 வாகனங்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது மணல் கடத்தி வந்த 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மாலை மலர்

ரிஷிவந்தியம்:

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை வழிமறித்து, அதனை ஓட்டி வந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் பரமனந்தல் பகுதியை சேர்ந்த சின்னராசு (வயது 24) என்பதும், முஸ்குந்தா நதியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னராசுவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் காட்டு வன்னஞ்சூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து சோதனை செய்தனர். அதில் மணி நதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.