செய்திகள்

மதுரையில் சுடப்பட்ட ரவுடிகள் 6 கொலைகளை செய்தவர்கள் பரபரப்பு தகவல்கள்

மதுரையில் நேற்று முன் தினம் சிக்கந்தர்சாவடியில் கொல்லப்பட்ட ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் 6 கொலைகளை செய்தவர்கள் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

மதுரை:

மதுரையில் நேற்று முன் தினம் சிக்கந்தர்சாவடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி., தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் அறிக்கை அனுப்பினார். மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் தப்பிக்க உதவியதாக முத்து இருளாண்டியின் மனைவி முத்துலட்சுமி, மைத்துனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் பழிக்குப் பழியாக நடைபெற்று வந்த கொலை சம்பவங்களில் தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட 2 ரவுடிகளும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதுபற்றிய திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-

மதுரையில் கிழக்கு மண்டல தலைவர்களாக இருந்த வி.கே.குருசாமி (தி.மு.க.), ராஜபாண்டி (அ.தி.மு.க.) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி இருதரப்பு ஆதரவாளர்களிடையே மோதலாக மாறி கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து 15 கொலை சம்பவங்களை அரங்கேற்றி உள்ளது.

தற்போது சுட்டுக் கொல்லப்பட்ட மந்திரி என்ற முத்து இருளாண்டியும், சகுனி கார்த்திக்கும் முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியின் ஆதரவாளர்கள். கடந்த 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக ராஜபாண்டி மற்றும் வி.கே.குருசாமி தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் 2003-ம் ஆண்டு ராஜபாண்டியின் அண்ணன் மகன் முனிய சாமி என்ற சின்ன முனுசு படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக வி.கே.குருசாமியின் ஆதரவாளர்களை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர். இந்த கொலைக்கு பழிக்குப் பழியாக 2008-ம் ஆண்டு வி.கே.குருசாமியின் ஆதரவாளரான மாரிமுத்து, மூர்த்தி, ரமேஷ் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ராஜ பாண்டியின் முக்கிய ஆதரவாளர்களான மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டியின் ஆதரவாளர்களை கைது செய்தனர். தொடர்ந்து வி.கே.குருசாமியின் மைத்துனர் பாம்பு பாண்டி 2013-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதிலும் மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் முக்கிய பங்காற்றி இருப்பது தெரியவந்தது.

இந்த கொலை தொடர்பாக விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது 2014-ம் ஆண்டு மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அதன் பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கிடையில் கொலை சம்பவங்கள் மட்டும் அடுத்தடுத்து நடைபெற்று வந்தன.

வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள், சகுனி கார்த்திக் மாமாவும், ரியல் எஸ்டேட் அதிபருமான மயில்முருகனை கொலை செய்தனர். மாறி மாறி இருதரப்பினரும் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 2015-ம் ஆண்டு வி.கே.குருசாமியின் ஆதரவாளர் மணி என்ற முனியசாமி கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து ராஜபாண்டி ஆதரவாளரான மாரி என்ற மொட்டை மாரியை வி.கே.குருசாமி ஆதரவாளர்கள் பழி தீர்த்தனர். இந்த கொலை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து ராஜபாண்டியின் ஆதரவாளர்களான மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் சேர்ந்து வி.கே.குருசாமியின் ஆதரவாளரான காட்டு ராஜாவை கொலை செய்தனர்.

இதுகுறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவங்களின் உச்சக்கட்டமாக வி.கே.குருசாமியின் ஆதரவாளர்கள் கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியின் மகன் முனியசாமி என்ற தொப்பிலி முனியசாமியை கடத்திச்சென்று ராம நாதபுரம் மாவட்டம் அரிய மங்கலத்தில் எரித்துக் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்ந்து வி.கே.குரு சாமியின் ஆதரவாளர்கள் சடையாண்டி, மணி, மாயக்கண்ணன் ஆகியோர் ராஜபாண்டி ஆதரவாளர்களால் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைகள் தொடர்பாக தெப்பக்குளம், கோவிலாங்குளம், செல்லூர் போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவங்களில் தற்பொது சுட்டுக் கொல்லப்பட்ட மந்திரி என்ற முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக செயல்பட்டுள்ளனர். இவர்களை போலீசார் தேடி வந்தனர்.

மந்திரி என்ற முத்து இருளாண்டி மீது 2017-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பேரையூரில் போலீசாரை தாக்கியது உள்பட 22 வழக்குகள் உள்ளன. இதில் 6 கொலை, 4 கொலை முயற்சி, 6 கொள்ளை உள்ளிட்டவையும் அடங்கும். சகுனி கார்த்திக் மீது 6 கொலை, 5 கொலை முயற்சி, 3 வழிப்பறி கொள்ளை, 3 ஆயுத வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் உள்ளன.

இந்த வழக்குகளில் போலீசார் அவர்களை தேடி வந்தபோதுதான் நேற்று முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் இருதரப்பினர் மோதல் மற்றும் கொலைகளில் தற்போது 2 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

2001-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் பழிக்குப்பழி சம்பவங்களில் 15 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. #tamilnews