கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கின்றன. கடந்த மாதம் ஆன்லைன் மூலமாக இரவு கேளிக்கை விருந்து நடத்த இருந்த நிலையில் போலீசார் கும்பலை மடக்கி பிடித்தனர்.
இந்த நிலையில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி அலத்துரை கிராமத்தில் திணேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பாண்டி , வல்லரசு, விருமாண்டி ஆகிய 4 பேர் செல்போனில் யூடியுப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடமிருந்து கள்ளசாராயம் காய்ச்ச பயன்படுத்திய குக்கர் , டியூப் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்து வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அரசின் தடை உத்தரவை மீறுபவர்கள், இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடு வோரைக் கண்காணிக்க மலைப்பகுதிகளில் டிரோன் கேமராவைப் பயன்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.