சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சண்முகா நகரில் கடந்த 29-ந் தேதி தினகரன் ஆதரவாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்தனர்.
அந்த துண்டு பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்துகளும், அவதூறு பரப்பும் வகையில் இடம் பெற்றிருந்தன.
நீட் தேர்வு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிரான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
அதன் பேரில் 143 (அனுமதியில்லாமல் ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூடுதல்), 120 பி (கூட்டு சதி), 124 ஏ(மத்திய, மாநில அரசின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுதல்), 153 (வன்முறை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல்), 504 (பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 506 (2) (கொலை மிரட்டல் விடுத்தல்), 449 (அத்துமீறி நுழைதல்) ஆகிய 7 பிரிவுகளில் டி.டி.வி.தினகரன், கர்நாடக மாநில பொதுச் செயலாளர் புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், செல்வம், பெங்களூரு வெற்றிவேல், கலைவாணி உள்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினகரன் ஆதரவு சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெங்கடாசலம், சூர்யா, சந்திரன், கலைவாணி, சசிகுமார் ஆகியோர் 5 பேரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினகரன் மற்றும் புகழேந்தியை கைது செய்ய போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே தினகரன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை சேலம் மாநகர போலீஸ் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்தனர்.
இதுகுறித்து மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழ் தேச துரோக வழக்கு ஒருவர் மீது பதிவு செய்ய வேண்டுமானால் நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும், இருநாடுகளுக்கு இடையே குழப்பதை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டலோ அல்லது பேசி இருந்தாலோ, அவர்கள் மீது இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும்.
இதுதவிர அன்னிய செலவாணி மோசடி வழக்கில் ஈடுபட்டிருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம்.
ஆனால், தினகரன் ஆதரவாளர்கள் கொடுத்த துண்டு பிரசுரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளுக்கு எதிராக செயல்படுதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தினகரன் சம்பவ இடத்துக்கு வராததால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.