செய்திகள்

காவலர்கள் போராட்ட அறிவிப்பு: மெரினா மற்றும் கோட்டையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

மெரினாவில் குடும்பத்துடன் திரண்டு போலீசார் போராடப்போவதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து மெரினா கடற்கரை மற்றும் தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் சங்கம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே காவலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

மற்ற அரசு துறைகளில் இருப்பது போல சங்கம் இல்லாததால் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் போய் விடுகிறது என்பதே காவலர்களின் நெடு நாளைய குறையாகவும் இருந்து வருகிறது.

இதனால் கீழ் மட்டத்தில் பணிபுரியும் போலீசார், கடுமையாக பாதிக்கப்படும் நிலை இருந்து வருகிறது. உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் வேலை பார்க்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் காவலர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், 8 மணி நேர வேலையை காவல் துறையிலும் அமல்படுத்த கோரியும், போலீசார் போராட்டம் நடத்தப் போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதுதொடர்பாக தென் சென்னையில் பரங்கிமலையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் போராட்டம் நடத்தப்போவதாக போலீசார் குறிப்பிட்டிருந்தனர்.

இதுபோன்ற போஸ்டர் திருச்சியிலும் ஒட்டப்பட்டிருந்தது. சட்டசபையில் போலீஸ் மானிய கோரிக்கை தொடங்கும் நாளான இன்று கோட்டையை காவலர்களின் குடும்பத்தினர் முற்றுகையிடப் போவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.மெரினாவில் குடும்பத்துடன் திரண்டு போலீசார் போராடப்போவதாக அறிக்கை ஒன்றும் வெளியானது.

இதனால் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மெரினா கடற்கரை மற்றும் தலைமை செயலகம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் திட்டமிட்ட படி இன்று போலீஸ் குடும்பத்தினர் கோட்டையில் நுழைந்து போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதால் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டது. இன்று முதல் 3 நாட்களுக்கு போலீசார் கட்டாய தேவையின்றி விடுமுறை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

போலீஸ் மானியக் கோரிக்கை மீதான விவாதம் வருகிற 8-ந்தேதி முடிகிறது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இந்த 3 நாட்களும், போலீஸ் சங்கம் அமைக்ககோரி புதிதாக கோ‌ஷங்கள் எதுவும் எழுந்து விடக்கூடாது என்பதில் உயர் போலீஸ் அதிகாரிகள் மிகுந்த கவனமுடன் உள்ளனர். இதனை தொடர்ந்து மெரினாவில் கலங்கரை விளக்கத்தில் தொடங்கி கோட்டை வரையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.