தற்கொலை 
செய்திகள்

கோரிமேட்டில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

கோரிமேட்டில் மதுகுடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கோரிமேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் பச்சையப்பன் (வயது53). இவர் கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். இவருக்கு மாலா என்ற மனைவியும் 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பச்சையப்பனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று பச்சையப்பன் வீட்டுக்கு அவரது உறவினர்கள் வந்திருந்தனர். அந்த நேரத்தில் பச்சையப்பன்  மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவரது மனைவி மாலா உறவினர்கள் வந்திருக்கும் போது  இப்படி மதுகுடித்துவிட்டு அவமானப்படுத்துகிறீர்களே என கண்டித்தார்.

இதனால் மனமுடைந்த பச்சையப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்போது மாடிக்கு  சென்ற அவர் அருகில் உள்ள மாமர கிளையில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார். மாடிக்கு சென்ற கணவர் வெகுநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த மாலா மாடிக்கு சென்று பார்த்தார்.  

அப்போது மாமரத்தில் கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன்  கணவரை தூக்கில் இருந்து மீட்டு அருகில் உள்ள  ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு  கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பச்சையப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், உதவி  சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.