பேராவூரணி:
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ரபீக் அகமது (வயது 40). இவர் பேராவூரணி கடைவீதியில் புத்தகம், நோட்டு கடை மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் கொரோனா தொற்று இருந்ததை மறைத்ததாகவும், பின்னர் அதிகாரிகள் சோதனை நடத்தி சிகிச்சைக்கு அழைத்து சென்று விட்டனர். மேலும் அவரது கடை அருகே செருப்புக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதால் பேராவூரணிக்கு செல்வோர் கவனமாக இருக்க வேண்டும். இதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று பெண் குரலில் வாட்ஸ்-அப்பில் வாய்ஸ் மெசேஜ் வைரலாக பரவியது.
இதை அறிந்த ரபீக் அகமது அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் பேராவூரணி போலீசில் புகார் செய்தார். அதில் எனக்கு கொரோனா இல்லை. என்னை பற்றி தவறான தகவல் பரப்பி என்னையும், என் குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.