செய்திகள்

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: தொழில் அதிபரின் செல்போன் அழைப்புகள் குறித்து போலீசார் விசாரணை

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபரின் செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு தின்னியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெள்ளிராஜ் (80). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோத்தகிரி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபர் பெள்ளி ராஜின் கைத்துப்பாக்கி, செல்போன் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

தடயவியல் நிபுணர்கள் கைப்பற்றிய பொருட்கள் தவிர வேறு ஏதாவது ஆவணங்களோ, முக்கிய தயடமோ கிடைக்ககும் என்பதால் அவரது அறையை பூட்டி சாவியை போலீசார் எடுத்து சென்றனர்.

தொழில் அதிபர் பெள்ளிராஜ் அறையில் இருந்து ஒரு டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதனை அவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. டைரி குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் பெள்ளிராஜ் செல்போனுக்கு வந்த அழைப்புகள் மற்றும் அவர் அழைத்த அழைப்புகள் குறித்தும், டைரியில் உள்ள தொலைபேசி எண்கள் குறித்தும் விசாரணை நடத்தி முடிவு செய்துள்ளனர்.

இதில் ஏதாவது தகவல்கள் கிடைக்கும் என போலீசார் கருதுகிறார்கள்.