ஜோலார்பேட்டை:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் இருந்த பேரறிவாளன் ஒரு மாத பரோலில் கடந்த 24-ந் தேதி விடுவிக்கப்பட்டார். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் பேரறிவாளன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் பரோல் வழங்கியதற்கு காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக அரசு பரோலை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியது.
மேலும், பேரறிவாளன் வீட்டை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாகவும் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அஸ்லம்பாஷா அறிவித்திருந்தார்.
ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு எஸ்காட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாப்பு கருதி, காங்கிரஸ் கட்சியின் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, பேரறிவாளன் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் ரத்து செய்தனர்.