செய்திகள்

ஆசாராம் பாபுவை வரவேற்க மாலையுடன் ஜெயிலுக்கு சென்ற ஆதரவாளர்- போலீசார் விசாரணை

ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, அவரை வரவேற்க மாலையுடன் ஜெயிலுக்கு சென்ற ஆதரவாளரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். #AsaramBabu #AsaramCaseVerdict #AsaramVerdict #Asaramfollower

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (77). இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்து கற்பழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஷாஜஹான்பூர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

இதையொட்டி சிறையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் ஆசாராம் பாபுவுக்கு ஏராளமான பக்தர்கள் இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஆசாராம் பாபு விடுதலையாக வேண்டி வாரணாசி, போபால் உள்ளிட்ட இடங்களில் உள்ள அவரது ஆசிரமத்தில் ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்தனர்.

SCROLL FOR NEXT