லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ரா நகரில் உள்ள தாஜ் மஹாலை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் சிலர் அருகாமையில் இருக்கும் ஓட்டல்களில் அறை எடுத்து தங்குகின்றனர்.
இந்நிலையில், தாஜ் மஹாலுக்கு செல்லும் தெற்கு வாசல் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று சுற்றி வருவதாக ஆக்ரா போலீசாருக்கு இன்று காலை தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார், அந்த ஆளில்லா விமானம் எங்கிருந்து இயக்கப்படுகிறது? என்பதை கண்காணித்தனர்.
அருகாமையில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்து சிலர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்த விமானத்தை இயக்கி வருவதை அறிந்த போலீசார் உடனடியாக அந்த ஓட்டலை முற்றுகையிட்டனர். ஆளில்லா விமானத்தை இயக்கிய வெளிநாட்டுக்காரர் உள்பட இருவரை கைது செய்த போலீசார், அவர்கள் தங்கி இருந்த ஓட்டல் உரிமையாளர், நிர்வாகி மற்றும் பணியாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews #TajMahal #tourists #drone