தேனி:
தேனி அருகே உள்ள டொம்புச்சேரியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 55). இவர் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவருக்கு அன்பு கண்ணன் (வயது 25), அஜித் கண்ணன் (22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முதல் மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். பிரபாகரன் கடந்த 11-ந் தேதியில் இருந்து பணிக்கு செல்லாமல் தனது சொந்த வேலையில் இருந்து வந்துள்ளார்.
2-வது மகனுக்கு விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார். நேற்று பிரபாகரன் போடி டவுன் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்ற போது உயர் அதிகாரிகள் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
தனது சொந்த வேலை காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் பணிக்கு வர இயலவில்லை என கூறியுள்ளார். இதனையடுத்து அவரை வேறு போலீஸ் நிலையத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு உடல் நிலை சரி இல்லை என்பதால் வேறு இடத்தில் பணியாற்ற இயலாது என கூறினார். இதனையடுத்து இரவு வீட்டுக்கு வந்த பிரபாகரன் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்தார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.