கோப்பு படம். 
செய்திகள்

ஓசூர் அருகே தமிழக எல்லையில் மதுபானம் வாங்க சென்றவர்களை விரட்டி அடித்த போலீசார்

ஓசூர் அருகே தமிழக எல்லையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது. மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் போலீசார் அவர்களை விரட்டினர்.

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வரிசையில் நின்றவர்களுக்கு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அவர்களுக்கு கைகளை கழுவுவதற்காக கிருமி நாசினி வழங்கப்பட்டது.

ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி, ஓசூர் சிப்காட் அருகே பல்லூர், ஆனேக்கல் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இந்த கடைகளில் தமிழக குடிமகன்கள் மது வாங்கி வந்தனர். ஒவ்வொரு நபருக்கும் ஒரு புல் பாட்டில் வழங்கப்பட்டது. அத்திப்பள்ளியில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால் போலீசார் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கூறியும் குடிமகன்கள் அதை கேட்கவில்லை. ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டினர். 

அத்திப்பள்ளி மதுபான கடையில் இருந்து மது வாங்கிக் கொண்டு தமிழகத்திற்குள் நுழைய முயன்றவர்களையும் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் சாலை வழியாக நடந்து சென்று மது வாங்குவதை தவிர்த்த குடிமகன்கள் வனத்துறை சோதனை சாவடி பின்புறம் உள்ள ஏரி வழியாக கர்நாடக மாநிலத்திற்குள் சென்று மது வாங்கிக் கொண்டு வந்தனர். ஆனேக்கல், பல்லூர் மற்றும் அத்திபள்ளி டவுன் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.

வேப்பனஅள்ளியை அடுத்த நல்லூர் அருகே ஆந்திர எல்லையில் அந்த மாநில அரசு மதுக்கடையை திறந்து இருந்தது. அங்கு சென்ற வேப்பனஅள்ளி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மது வழங்கப்படவில்லை. ஆந்திராவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே ஆதார் கார்டு நகலை வாங்கிக் கொண்டு மது பாட்டில்களை கொடுத்தனர்.