கோவை:
கோவை போத்தனூர் ரெயில்வே போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவர் போத்தனூர் ரெயில்வே போலீசில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(வயது 28). இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் தங்கமணியின் தந்தை மற்றும் கணவர் உள்ளிட்ட அனைவரும் உட்கார்ந்து பேசி கொண்டிருந்தனர். இந்தநிலையில் தங்கமணியின் தந்தை வீட்டின் மாடிக்கு சென்றுவிட்டார். கணவர் மற்றும் குழந்தை வெளியில் சென்று விட்டனர். அப்போது வீட்டுக்குள் இருந்த தங்கமணி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த குழந்தை தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் தூக்கில் தொங்கி கொண்டிருந்த தங்கமணியை கீழே இறக்கி பார்த்தபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தங்கமணியின் தந்தை போத்தனூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பூசாரி பாளையத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி கோகிலா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பிரபு ஆர்.எஸ்.புரம் பகுதியில் சொந்தமாக வாகன பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறில் மனவேதனை அடைந்த கோகிலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் முபாரக் ஷாஜி இவரது மகன் அபாஸ் (வயது 14). இவர் கோவை சலீவன் வீதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து காந்தி பார்க்கில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.
வேலையின் போது இவர் தனக்கு சரியாக படிப்பு வராததை நினைத்து மன வேதனை அடைந்தார் இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.