செய்திகள்

நிதி மோசடி வழக்கு: வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடிக்கு பிடிவாரண்டு

பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி வழக் கில், நிரவ் மோடிக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. #NiravModi #MehulChoksi #PNBFraudCase

மாலை மலர்

புதுடெல்லி:

நாட்டின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு வைர நகை நிறுவனமான ‘நிரவ் மோடி’யின் நிறுவனர் நிரவ் மோடி.

இவரும், இவரது குடும்ப உறுப்பினர்களும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) பரிமாற்றம் செய்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. ‘சுவிப்ட்’ என்னும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு அமைப்பு வழிமுறையின் கீழ் இந்த நிதிப் பரிமாற்றம், சட்டவிரோதமாக நடந்து உள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி புகாரின்மீது சி.பி.ஐ., விசாரணை நடத்துகிறது.

இதில் நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் சோக்சி ஆகிய இருவர் மீதும் தலா 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவர்கள் இருவருமே இந்த வங்கி மோசடி அம்பலத்துக்கு வருவதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் முதல்வாரம் நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டனர்.

அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., இ-மெயில் அனுப்பியது. ஆனால் அவர்கள் வெளிநாட்டில் தொழிலைக் கவனிக்க வேண்டி உள்ளதாலும், உடல் நலப்பிரச்சினை இருப்பதாலும் விசாரணைக்கு வர முடியாது என கூறி விட்டனர். ஆனால் அவர்கள் எந்த நாட்டில் உள்ளனர் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் நிரவ் மோடி இப்போது ஹாங்காங்கில் இருப்பதாக மத்திய அரசு கண்டுபிடித்து உள்ளது.

இதையடுத்து மும்பை சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நிரவ் மோடி, சோக்சி ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. முறையிட்டது.

அதை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதை சி.பி.ஐ. வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.

இப்போது சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதால், அடுத்த கட்டமாக அவர்கள் இருவருக்கும் எதிராக ‘இன்டர்போல்’ என்னும் சர்வதேச போலீஸ் அமைப்பிடம் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக் குமாறு சி.பி.ஐ. கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டால் ‘இன்டர்போல்’ அமைப்பு, தனது 186 உறுப்பு நாடுகளுக்கு, சம்பந்தப்பட்ட இருவருக்கும் எதிராக கோர்ட்டால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளதை கூறி, அவர்கள் எந்தவொரு நாட்டுக்கும் செல்வதற்காக விமான நிலையத்துக்கு வந்தால் கைது செய்ய வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  #NiravModi #MehulChoksi #PNBFraudCase  #Tamilnews