செய்திகள்

நிரவ்மோடியின் சோலார் மின் உற்பத்தி நிலையம் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி மன்னன் நிரவ் மோடிக்கு சொந்தமான 134 ஏக்கர் பரப்பளவில் சூரியஒளி மின் உற்பத்தி நிலையத்தை அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர். #NiravModi #PNBScam

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நிரவ் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிரவ் மோடி, அவரது மனைவி அபி, சகோதரர் மற்றும் உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோரை இந்தியா கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கடன் மோசடி தொடர்பாக நிரவ் மோடியின் நிறுவனங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. அவருக்கு சொந்தமான நகைகள், வைரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் அகமத் நகர் பகுதியில் நிரவ்மோடிக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தை முடக்கி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இந்த நிலத்தில் மிகப்பெரிய சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது.