செய்திகள்

பி.என்.பி மோசடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடியை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கக்கோரி சுப்ரீம் கோர்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. #PNBScam

மாலை மலர்

புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பிராடி ரோடு கிளை மூலம் நடந்த ரூ.11,700 கோடி மோசடி நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டார். அவர் மற்றும் 3 பேர் வெளிநாடு தப்பி விட்டனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மோசடி தொடர் பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நிரவ் மோடி நிறுவன அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல அமலாக்கத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் உள்ள நிரவ் மோடி நிறுவனங்களிலும் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

பொதுநல மனுவில் ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாதது தொடர்பாக வரைமுறைகளை வகுக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இந்த மனு வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 

விசாரணைக்கு வருகிறது. #PNBScam #PNBFraudCase #TamilNews