செய்திகள்

பஞ்சாப் நே‌ஷனல் வங்கி மோசடியை போல மேலும் ரூ.5,280 கோடி மோசடி அம்பலம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி முறைகேடு புகார் வெளியாகியுள்ள நிலையில், புதிதாக ரூ.5,280 கோடி வங்கி மோசடி குறித்து தற்போது தெரிய வந்துள்ளது. #NiravModi #GitanjaliScam #PNBFraudCase

மாலை மலர்

புதுடெல்லி:

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் நடந்த ரூ.11,400 கோடி மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், மாமா மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த மாதம் 31-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதேபோல அமலாக்கத் துறையினரும் விசாரணை செய்து நாடு முழுவதும் சோதனை நடத்தினர். நிரவ் மோடியின் சொத்துக்கள், சொகுசு கார்கள், பொருட்கள், உள்பட அனைத்தும் முடக்கப்பட்டன.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையின் அதிகாரிகள் உடந்தையால் இந்த மோசடி நடந்ததை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த மோசடி தொடர்பாக 6 வங்கி ஊழியர்கள் உள்பட 14 பேரை சி.பி.ஐ. கைது செய்தது.

அப்போது கீதாஞ்சலி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் குறித்த விவரம் கிடைத்துள்ளது. முதலீடு என்ற பெயரில் 31 வங்கிகளில் மொத்தம் ரூ.5,280 கோடியை வங்கிகளில் பெற்ற இந்த நிறுவனம், அதை திரும்ப செலுத்தவில்லை என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது.

தங்களது தகுதி அளவுக்கும் மீறி கீதாஞ்சலி நிறுவனம் இந்த கடன்களை பெற்றுள்ளது. எனவே இதை மேகுல் சோக்சி திரும்ப செலுத்தாமல் விட்டால், வங்கிகள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிவரும்.

கீதாஞ்சலி ஜூவல்லரி வாங்கிய கடன் விவரம்:

பஞ்சாப் நேஷனல் வங்கி: ரூ.587 கோடி

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி: ரூ.405 கோடி

கார்பொரேசன் வங்கி: ரூ.297 கோடி

பேங்க் ஆப் பரோடா: ரூ.265 கோடி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா: ரூ.206 கோடி

சிண்டிகேட் வங்கி: ரூ.231 கோடி

கனரா வங்கி: ரூ.195 கோடி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: ரூ.176 கோடி

இவ்வாறு அந்த பட்டியல் நீள்கிறது. #NiravModi #GitanjaliScam #PNBFraudCase #PNBScam #tamilnews