திருபுவனை:
புதுவை திருபுவனை காந்தி வீதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 74). தமிழக மின்வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது பா.ம.க.வில் திருபுவனை தொகுதி துணை தலைவராகவும், வன்னியர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் மாநில ஆலோசனை குழு தலைவராக இருந்து வந்தார்.
இவருக்கு ஜெயா என்ற மனைவியும் 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 6 வருடங்களுக்கு முன்பு ஜெயா இறந்து விட்டார். இதையடுத்து ஜெயராமன் தனது மகன் மோகன்ராஜ் என்பவருடன் வசித்து வந்தார். மற்றவர்கள் வெளியூர்களில் வசித்து வருகிறார்கள்.
ஜெயராமன் தனது வீட்டின் அருகிலேயே 10 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். தினமும் இரவு 11 மணிக்கு ஜெயராமன் வாடகை வீடுகளில் பைப் லைன் மூடப்பட்டுள்ளதா? மின் விளக்கு அணைக் கப்பட்டுள்ளதா? என சென்று பார்ப்பது வழக்கம்.
அது போல் நேற்று இரவு 11 மணிக்கு ஜெயராமன் வாடகை வீடுகளில் சென்று பார்வையிட்டார். அப்போது ஒரு கும்பல் ஜெயராமனை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக குத்தியது. அவர் அணிந்திருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டது.
ஜெயராமனின் அலறல் சத்தம் கேட்டு வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் வந்து பார்த்த போது ஜெயராமன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்- இன்ஸ் பெக்டர்கள் பிரியா, பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஜெயராமனை கொலை செய்து நகை- பணத்தை கொள்ளையடித்த புதுவையை அடுத்த கெங்கராம் பாளையத்தை சேர்ந்த ரூபன்ராஜ் (22) மற்றும் திருபுவனை புதுமனை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று காலை கைது செய்தனர். மற்ற 2 பேரை தொடர்ந்து தேடி வருகிறார்கள். #tamilnews