செய்திகள்

சுஷ்மா ஸ்வராஜ் பிறந்தநாள் இன்று - பிரதமர் மோடி வாழ்த்து, புகழாரம்

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா ஸ்வராஜ்க்கு பிரதமர் மோடிபிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, இந்திய வெளியுறவு கொள்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார். #SushmaSwaraj

மாலை மலர்

புதுடெல்லி:

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் தூதரகத்தை அணுகி தீர்வை எட்டும் நிலை இருந்தது. அதில் காலதாமதமும் ஏற்பட்டது. ஆனால், சுஷ்மா ஸ்வராஜ் மத்திய மந்திரியாக பொறுப்பேற்றது முதல் சமூக வலைதளமான ட்விட்டரை தனது பிரதான தொடர்பு சாதனமாக வைத்துக்கொண்டார்.

இதனால், வெளிநாடுகளில் எங்கு இந்தியர்களுக்கு பிரச்சனை என்றாலும் சுஷ்மா ஸ்வராஜை ட்விட்டரில் தொடர்பு கொண்டால், அவர் உடனடி தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கிறார். மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்து துறைகளையும் சமூக வளைதளத்தில் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை ஏற்படுத்தினார்.

பாஸ்போர்ட், விசா போன்ற எல்லா பிரச்சனைகளுக்கும் ட்விட்டரில் நமக்கு தீர்வு கிடைக்கிறது. ட்விட்டரில் இயங்கும் உலகின் அனைத்து பெண் அரசியல்வாதிகளில் அதிக பாலோயர்கள் கொண்டவர் என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார். இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“தனித்துவம் கொண்ட தலைவராக இருக்கும் சுஷ்மா, இந்திய வெளியுறவு கொள்கையை வடிவமைத்ததில் முக்கிய பங்காற்றியுள்ளார்” என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியள்ளார். #SushmaSwaraj #TamilNews