செய்திகள்

மத்திய மந்திரிசபையில் 9 புதிய மந்திரிகள் - ஜனாதிபதி மாளிகையில் இன்று பதவி ஏற்பு

மத்திய மந்திரிசபை இன்று, 3-வது முறையாக மாற்றியமைக்கப்பட உள்ளது. 9 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் பிரதமர் மோடி தலைமையில் 41 மந்திரிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர், இரண்டு முறை சில மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு, தான் எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆறு மந்திரிகள், புதிய மந்திரிகள் பதவியேற்பதற்காக தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து, ஒன்பது பேர் புதிய மந்திரிகளாக இன்று பதவி ஏற்க உள்ளனர். இன்று காலை 10:30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெரும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒன்பது பேருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைக்கிறார்.

புதிய மந்திரிகளில் விவரம்:

1. சிவ் பிரதாப் ஷுக்லா - மாநிலங்களவை உறுப்பினர் ( உத்தரப்பிரதேசம் )

2. சத்யபால் சிங் - மக்களவை உறுப்பினர் ( உத்தரப்பிரதேசம் )

3. ராஜ்குமார் சிங் - மக்களவை உறுப்பினர் ( பீகார் )

4. அஷ்வினி சவுபே - மக்களவை உறுப்பினர் ( பீகார் )

5. ஆனந்த்குமார் ஹெக்தே - மக்களவை உறுப்பினர் ( கர்நாடகம் )

6. கஜேந்திர சிங் ஷெகாவத் - மக்களவை உறுப்பினர் ( ராஜஸ்தான் )

7. வீரேந்திர குமார் - மக்களவை உறுப்பினர் ( மத்தியப்பிரதேசம் )

8. அல்போன்ஸ் கண்ணன்தனம் - முன்னாள் இந்திய நிர்வாக சேவை அதிகாரி

9. ஹர்தீப் சிங் பூரி - முன்னாள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி