செய்திகள்

சென்னையில் செய்தியாளர்களை சந்திக்கிறார் மோடி - காவிரி பிரச்சனைக்கு விளக்கம் கிடைக்குமா?

ராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வரும் பிரதமர் மோடி கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PMModi

மாலை மலர்

சென்னை:

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் கண்காட்சி இன்று தொடங்கி 4 நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் தயாரான நவீன ரக பீரங்கிகள், டாங்குகள், நவீன ராடார்கள், போர் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியை பார்வையிட நாளை பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். காவிரி பிரச்சனையால் தமிழகம் முழுவதும் உச்சகட்ட போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதனை அடுத்து, சுமார் 5 ஆயிரம் போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாளை சென்னை வரும் மோடி கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது காவிரி பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வருவது தொடர்பான கேள்விக்கணைகள் பிரதமர் மோடியை நோக்கி பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது. #PMModi #TamilNews