செய்திகள்

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 20ம் தேதி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 20-ம் தேதி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஸ்வீடன், இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்து பேசுகிறார் என வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், முதல்கட்டமாக ஸ்வீடன் செல்லும் பிரதமர் மோடி, ஸ்வீடன் மன்னர் குட்சா, ஸ்வீடன் பிரதமர் லோவனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அதன்பின்னர், இங்கிலாந்து செல்லும் மோடி காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும், இங்கிலாந்து பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் சந்தித்து பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 20ம் தேதி ஜெர்மன் தலைநகர் பெர்லின் செல்லும் மோடி அதிபர் ஏஞ்சலா மெர்கெலை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருதரப்பும் பரஸ்பரம் ஒத்துழைப்பது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மன் அதிபராக நான்காவது முறையாக பொறுப்பேற்றார். அதன்பின் பிரதமர் மோடியுடன் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. #Tamilnews