பிரதமர் மோடி 
செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: நாளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, நாளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

புதுடெல்லி:

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகின் 165 நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

ஆசிய நாடுகளை காட்டிலும் ஐரோப்பாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 ஆயிரத்து 384 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று மாலை நிலவரப்படி 8 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 598 பேரை இந்த கொடிய வைரஸ் தாக்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நாளை இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 5ம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT