சென்னை:
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது ‘காலை வணக்கம்’ என தமிழில் பேசி உரையைத் தொடங்கினார். மேலும், ‘‘முதல் முறையாக தமிழ்நாட்டில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. சோழர்கள் ஆண்ட பகுதியில் இந்த அளவிற்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இது வரலாற்று சிறப்பு மிக்க கண்காட்சியாகும். 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்களும், 125 வெளிநாட்டு நிறுவனங்களும் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன.
தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவத்தை பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது. உலகிற்கு அகிம்சையை போதித்த நாடு இந்தியா. வாழும் நாடு வெவ்வேறு என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. உலகமே ஒன்றிணைந்த சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். இந்தியா முதன்முறையாக ராணுவ தளவாடங்கள் தயாரித்து சாதனைப் படைத்து வருகிறது’’ என்றார்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசி வருகிறார். #Modi #Chennai #DefenceExpo2018