பிரதமர் மோடி 
செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மோடி ஆய்வு

சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் பொருளாதார இழப்புகளை சந்தித்து உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டம் என்கிற திட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகளுக்கு மிகவும் எளிமையான விதிமுறைகளுடன் ரூ.10,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார்.அப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அவற்றில் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன என்றும் 5,500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இந்தத் திட்டத்தை தடையின்றி செயல்படுத்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல அமைச்சகம் மொபைல் பயன்பாடு உள்ளிட்ட முறையான தகவல் தொழில்நுட்பங்களை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து பிரதமர் திருப்தி தெரிவித்தார். மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான கண்ணோட்டத்தில் மட்டும் இந்த திட்டத்தை பார்க்கக் கூடாது என்றும் அவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக இது ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்றும் மோடி குறிப்பிட்டார்.