குஜராத் மாநில தொழில் நகரமான ராஜ்கோட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வாரந்தோறும் சுமார் 100 விமானங்கள் வந்து செல்கின்றன.
தற்போது இயங்கி வரும் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய இயலாத நிலை இருப்பதால், இந்த விமான நிலயத்தில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹிராசார் பகுதியில் புதிய விமான நிலையம் கட்டுவதற்காக 2,534 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரை ராஜ்கோட்டுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அருகே புதிதாக பசுமை விமான நிலையம் கட்ட விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தீர்மானித்தது. இதற்கான அனுமதியை கடந்த மே மாதம் மத்திய அரசு அளித்தது.
அதிநவீன போயிங் A-320 ரக விமானங்கள் வந்து செல்லும் வகையில் உருவாகும் இந்த புதிய விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விமான நிலையத்துக்கு பயன்படுத்தும் 96 சதவீதம் நிலம் மாநில அரசின் கைவசம் இருந்த தரிசு நிலம் என அவர் குறிப்பிட்டார்.