சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. நேற்று தொடங்கிய இந்த கண்காட்சி 14-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கினாலும், அதன் தொடக்க விழா இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தார். டெல்லியில் இருந்து இன்று காலை 6.40 மணி அளவில் தனி விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9.36 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடி கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை புறப்பட்டார். சரியாக 10 மணிக்கு பிரதமர் மோடி திருவிடந்தை சென்றடைந்தார். பிரத்யேகமாக தயார்செய்யப்பட்ட ஹெலிபேடில் ஹெலிகாப்டர் பத்திரமாக இறங்கியது. பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பை உறுதி செய்ததும் ஹெலிகாப்டரில் இருந்து மோடி கீழே இறங்கினார். அவரை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் வரவேற்றனர். இவர்களுடன் தமிழக பாஜனதா பிரமுகர்களும் வரவேற்றனர்.
பின்னர் காரில் கண்காட்சி வளாகத்திற்கு சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. இந்திய ராணுவத்தின் பலத்தை பறைசாற்றும் வகையில் ராணுவ ஆயுதங்கள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பேசியபின்னர், பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.