புதுடெல்லி:
பிரதமர் மோடி நேற்று வானொலியில் உரை நிகழ்த்தும் போது சோழர்களின் கடற்படை பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-
டிசம்பர் 4-ந்தேதி நாம் இந்திய கடற்படை தினத்தை கொண்டாட இருக்கிறோம். தேசத்துக்கும், பூமியின் பெருங்கடல்களுக்கும் இடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது.
நாம் வரலாற்றின் ஏடுகளை புரட்டிப் பார்த்தோம் என்றால் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்களின் கடற்படை மிகச் சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாக கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்தில் அதை பொருளாதார பெரும் சக்தியாக மாற்றுவதில் அவர்களின் கடற்படைக்கு பெரும் பங்கு இருந்தது.
சோழர்களின் கடற்படை படையெடுப்புகள், ஆய்வுப் பயணங்களின் பல எடுத்துக் காட்டுகள் சங்க இலக்கியங்களில் இன்றும் காணப்படுகின்றன. உலகின் பெரும்பாலான கடற்படைகள் பலகாலம் கழித்துத்தான் போர்ப்பணியில் பெண்களை அனுமதித்திருந்தன. ஆனால் சோழர்களின் கடற்படையில் 800, 900 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகப்பெரும் எண்ணிக்கையில் பெண்கள் முக்கிய பங்களிப்பை தந்து இருக்கிறார்கள். போரிலும் பெண்கள் ஈடுபட்டனர். சோழர்கள் காலத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான தொழில் நுட்பம் இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் கடற்படை திறன் பற்றியும் பிரதமர் பாராட்டினார்.