பிரதமர் மோடி 
செய்திகள்

ரகுவன்ஷ் பிரசாத் மறைவால் அரசியலில் வெற்றிடம் -பிரதமர் மோடி இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் மறைவு பீகார் மற்றும் தேசிய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங்  உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பீகாரில் பெட்ரோலியத் துறையின் மூன்று திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

அப்போது பேசிய அவர், முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். ரகுவன்ஷ் பிரசாத் சிங் இப்போது நம்மிடையே இல்லை. அவரது மறைவு பீகார் மற்றும் தேசிய அரசியலில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மோடி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். ரகுவன்ஷ் பிரசாத் சிங் மறைவு சோகமானது என்றும், கிராமப்புற இந்தியாவைப் பற்றி தெளிவாக புரிந்து வைத்திருந்த மிகச்சிறந்த தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி கூறி உள்ளார்.

SCROLL FOR NEXT