செய்திகள்

திரிபுரா பதவியேற்பு விழாவில் அத்வானியை புறக்கணித்த மோடி

திரிபுராவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி புறக்கணித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாலை மலர்

அகர்தலா:

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி முதல் முறையாக அமைந்துள்ளது. இதையடுத்து, புதிய முதல் மந்திரியாக பிப்லாப் குமார் தேவ் பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கான பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் திரிபுரா முன்னாள் முதல் மந்திரி மாணிக் சர்க்கார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி மேடைக்கு வந்தபோது, ஒவ்வொரு தலைவராக எழுந்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். மோடியும் பதிலுக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றார். மேடையின் நடுவில் இருந்த மாணிக் சர்க்காரின் கையை பிடித்து சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்த நாற்காலியில் மோடி அமர்ந்தார்.

அப்போது மேடையில் இருந்த மூத்த தலைவர் அத்வானி பிரதமர் மோடிக்கு வணக்கம் செலுத்தினார். ஆனால், அவரை கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, அவருக்கு பதில் வணக்கமும் செலுத்தாமல் கடந்து சென்று விட்டார். இதை சற்றும் எதிர்பாராத அத்வானியின் முகம் சுருங்கியது.

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக மூத்த தலைவர் அத்வானியை பிரதமர் மோடி புறக்கணித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.