சென்னை:
சென்னை மாமல்லபுரம் அருகே திருவிடந்தை என்ற இடத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சியை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். பின்னர் அவர் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்தில் நடைபெறும் வைரவிழா கட்டிட திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி நாளை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை பகுதிக்கு செல்கிறார்.
கண்காட்சியை பார்வையிடும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்துக்கு வருகிறார். பிரதமர் வருகைக்காக ஐ.ஐ.டி வளாகத்தில் ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. வளாகத்தில் இருந்து காரில் பிரதமர் மோடி அடையாறு புற்றுநோய் மையத்திற்கு செல்கிறார். அவர் புற்றுநோய் மையத்துக்கு சர்தார் வல்லபாய் சாலையை பயன்படுத்த வேண்டும்.
ஆனால் சாலையில் செல்லும் போது கருப்பு கொடி காட்டுவார்கள் என்பதால் சாலை பயணத்தை பிரதமர் மோடி தவிர்க்கிறார். அதற்கு பதிலாக ஐ.ஐ.டி.யின் சுற்றுச்சுவரை இடித்து அடையாறு புற்றுநோய் மையத்துக்கு மோடி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புற்று நோய் மையம், கிண்டி சிறுவர் பூங்கா, ஐ.ஐ.டி. ஆகியவற்றை ஒரே காம்பவுண்டு சுவர் இணைக்கிறது. எனவே பிரதமர் செல்வதற்காக சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பிரதமர் மோடி புற்றுநோய் மையத்துக்கு செல்கிறார். பிரதமரின் பாதுகாப்புக்காகவும், கருப்பு கொடி காட்டுவார்கள் என்பதாலும் போலீசார் இந்த மாற்று ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஐ.ஐ.டி. வளாகத்தில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதற்கு இயற்கை ஆர்வலர் வி.சாந்தாராம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கிண்டி சிறுவர் பூங்காவில் நிறைய மான்கள் இருக்கிறது. ஹெலிகாப்டர் சத்தம் மான்களுக்கும், வன விலங்குகளுக்கும் இடையூறு செய்யும் வகையில் அமையும். மேலும் சுற்றுச்சுவரை இடித்து இயற்கையையும் சேதப்படுத்தியுள்ளனர்’’ என்றார்.
இதுகுறித்து அடையாறு புற்றுநோய் மைய தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறுகையில், ‘‘சுற்றுச்சுவர் இடிப்பு என்பது தற்காலிக ஏற்பாடுதான். பிரதமர் வந்து சென்றதும் சுற்றுச்சுவர் மீண்டும் கட்டப்பட்டுவிடும்’’ என்றார்.