குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குபதிவு நேற்று நடைபெற்றது. 2-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளுக்கு வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாரதிய ஜனதாவும், காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் ஆகியோரும் குஜராத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள்.
மத்திய குஜராத்தில் உள்ள லூனாவாடா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது கூறியதாவது:-
என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. என்னை மோசமாக சித்தரிக்கிறார்கள். குஜராத் மண்ணின் மைந்தனான என்னை அவர்கள் இப்படி அவமதிப்பு செய்கிறார்கள்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள சல்மான் நிசாமி டுவிட்டர் மூலம் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அதில், ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, அவருடைய பாட்டி இந்திரா காந்தி என குறிப்பிட்டு மோடிக்கு தாய்- தந்தை யார்? என்று கேட்டு இருக்கிறார். நாம் எதிரிகளிடம் கூட இது போன்ற கேள்விகளை கேட்க மாட்டோம்.
நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் என்னை அவமதிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாரத மாதாதான் எனது தாய்- தந்தை. எனது வாழ்க்கை முழுவதையும் பாரத மாதாவுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணித்துள்ளேன். எனது ஒவ்வொரு செயல்பாடும் 125 கோடி இந்திய மக்களுக்காக இருக்கும்.
என்னை விமர்சித்த சல்மான் நிசாமி இந்திய ராணுவ வீரர்கள் கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள் என்று கூறியவர். பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவை பாராட்டியவர். அப்சல் குரு போன்றவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வேண்டுமா? இது போன்றவர்களை குஜராத்தில் அனுமதிக்க வேண்டுமா?
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குஜராத்தில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி பிரதமரை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறியதாவது:-
குஜராத்தில் இப்போது நடைபெறுவது சட்டசபை தேர்தல். இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. அல்லது பாரதிய ஜனதா - காங்கிரசுக்கான தேர்தலும் அல்ல.
ஆனால், பிரதமர் மோடி குஜராத் மாநில வளர்ச்சி பற்றி தனது பிரசாரத்தில் எதுவுமே பேசுவதில்லை. நீங்கள் குஜராத் வளர்ச்சிக்கு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறீர்கள்? குஜராத் மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்?
அடுத்த 100 ஆண்டுகளுக்கு குஜராத்தை பாரதிய ஜனதாதான் ஆளும் என்று மோடி சொல்கிறார். ஆனால், குஜராத் எதிர்காலம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.
அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும் உலக பிரச்சினைகளை எல்லாம் பேசுகிறார். 22 ஆண்டுகளாக இங்கு பாரதிய ஜனதா ஆண்டு வருகிறது. நீங்கள் இங்கு செய்ததை சொல்லுங்கள்.