மத்திய மந்திரிசபை முன்னாள் செயலாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான டி.எஸ்.ஆர். சுப்ரமணியம்(79) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர் திருமநிலையூர் சீத்தாபதி ரமணா சுப்ரமணியன். கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற இவர் 1961-ம் ஆண்டு இந்திய ஆட்சியியல் கல்வியை நிறைவு செய்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆனார். லண்டனில் உள்ள இம்பிரியல் கல்லூரியில் பட்டயப் படிப்பை முடித்ததுடன் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திலும் பொது நிர்வாகத்துறைக்கான முதுநிலை கல்வியில் பட்டம் பெற்றார்.
டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் என சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர், 1-8-1996 முதல் 31-3-1998 வரை மத்திய மந்திரிசபையின் செயலாளராக பதவி வகித்தார்.
தனது பணிக்காலத்திலும், பணி ஓய்வுக்கு பின்னரும் ஆட்சியியல் தொடர்பாக பல்வேறு நூல்களை எழுதியுள்ள டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தனது 79-வது வயதில் டெல்லியில் இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், தகவல் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது மறைவு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘அரசுப் பணியாளராக மிக சிறப்பாக கடமையாற்றி தன்னை நிலைநிறுத்தி கொண்டவர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன். மேலும், முக்கியமான விவகாரங்கள் தொடர்பாக அவர் எழுதிய சிறப்புக்குரிய நூல்களின் மூலம் தனது அடையாளத்தையும் பதிவு செய்துள்ளார்.