சுப்ரீம் கோர்ட்டின் 29-வது தலைமை நீதிபதியாக கடந்த 10-10-1998 முதல் 31-10-2001 வரை பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர், ஏ.எஸ். ஆனந்த் எனப்படும் ஆதர்ஷ் சீன் ஆனந்த். முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றிருந்த இவர் கடந்த 2003-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பதவி ஏற்றார்.
நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஏ.எஸ். ஆனந்த், டெல்லி சாக்கெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சுமாரான பின்னர் கடந்த மாதம் 29-ம் தேதி வீடு திரும்பி இருந்தார்.
இந்நிலையில், இன்று நீதிபதி ஆனந்த்(81) மரணம் அடைந்ததாகவும், டெல்லி லோடி சாலையில் உள்ள அவரது வீட்டில் வரும் 3-ம் தேதி இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும் அவரது முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஆனந்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆனந்தின் இறப்பு வேதனை அளிப்பதாகவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துயரில் தனது நினவுகளும் இணைந்திருப்பதாகவும் தனது இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மோடி, நீதிபதி ஆனந்தின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.