தற்கொலை 
செய்திகள்

மணவாளக்குறிச்சி அருகே மாயமான பிளஸ்-2 மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார்

மணவாளக்குறிச்சி அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியே சென்ற பிளஸ்-2 மாணவர் தூக்கில் பிணமாக தொங்கினார்.

மாலை மலர்

மணவாளக்குறிச்சி:

மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை மாவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். கார் டிரைவர். இவரது மகன் சபீன் (வயது 17). நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். ஆயுத பூஜை விடுமுறைக்கு பின்னர் சபீன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் சபீனை அவரது பெற்றோர் கண்டித்தனர். 

கடந்த 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சபீன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களிலும் அவரை தேடி பார்த்தனர். ஆனால் சபீனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சபீன் மாயமானது பற்றி அவரது தந்தை அய்யப்பன் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சபீனை தேடி வந்தனர். 

இந்தநிலையில் சபீன், முட்டம் பகுதியில் சவுக்கு தோப்பில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங் கினார். அந்த பகுதிக்கு சென்ற சிலர், சபீன் பிணமாக தொங்குவதை பார்த்து மணவாளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சபீனின் பிணத்தை மீட்டனர். சபீனின் உடல் அழுகி துர்நாற்றம் வீசியபடி இருந்தது. சபீன் மாயமான அன்றே முட்டத்துக்கு சென்று தற்கொலை செய்து இருக்க வேண்டும் என தெரிகிறது. சபீனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

சபீன் தற்கொலை தொடர்பாக அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பள்ளி மாணவர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் மணவாளக்குறிச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.