கண்டமங்கலம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள கெண்டியங்குப்பத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் இன்று(வியாழக்கிழமை) கண்டமங்கலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண மண்டபத்துக்கு மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர், உறவினர்கள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ஆனந்தராஜுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. எனவே இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.
இதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இருவரும் கண்டமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு சென்று மணமகள், மணமகனின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
18 வயது ஆகாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி செல்லாது. இதை மீறி திருமணம் செய்து வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் திருமணத்தை நிறுத்துவதாக இருவீட்டாரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த பிளஸ்-2 மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.