செய்திகள்

கர்ப்பத்தை மறைத்து நாடகம்: பிளஸ்-2 மாணவி ஆண் குழந்தை பெற்றார்

கர்ப்பத்தை மறைத்து நாடகமாடிய பிளஸ்-2 மாணவி ஆண் குழந்தை பெற்றார். மாணவியிடம் நெருங்கி பழகிய வாலிபர் யார்? என்பது குறித்து அவரது பள்ளி தோழிகளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பூந்தமல்லி:

பூந்தமல்லியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாங்காட்டைச் சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளிக்கு வந்து சென்ற போது ஒரு வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் தனது தாயிடம் தெரிவிக்கவில்லை.

மேலும் தனது வயிற்றில் அடிக்கடி வலி இருப்பதாகவும், ‘கட்டி’யாக இருக்கலாம் என்று தாயிடம் தெரிவித்தார். இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு செல்லலாம் என்று தாய் கூறியபோது இப்போது வலி இல்லை என்று கூறி மாணவி நாடகமாடினார்.

இதனால் கர்ப்பத்தால் மாணவியின் வயிறு பெரி தான போது அவரது தாய் பெரிதாக நினைக்கவில்லை. 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை அவரது தாயிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாணவியை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி கூறினர்.

இதனை கேட்ட மாணவியின் தாயும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாணவியும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

இதுகுறித்து பூந்தமல்லி மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது மாணவியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை உள்ளதால் குழந்தையின் தந்தை யார்? என்று தெரியவில்லை.

மாணவியிடம் நெருங்கி பழகிய வாலிபர் யார்? என்பது குறித்து அவரது பள்ளி தோழிகளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT