ராமநாதபுரம்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் இன்று 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 18 மையங்களில் 5 ஆயிரத்து 337 மாணவர்களும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 17 மையங்களில் 4ஆயிரத்து 863 மாணவர்களும், மண்டபம் கல்வி மாவட்டத்தில் 21 மையங்களில் 5 ஆயிரத்து 647 மாணவர்களும் என மொத்தம் 15 ஆயிரத்து 847 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வுக்காக 153 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு, பல குழுக்களாக பிரிந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வெளி நபர்களை போலீசார் மூலம் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள்கள் ராமநாதபுரத்தில் 2 இடங்கள், கமுதி, பரமக்குடி, திருவாடானை, தங்கச்சிமடம், சாயல்குடி ஆகிய மையங்களில் இருந்து வினியோகிக்கப்பட உள்ளன. தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் ஸ்கிரைப் எழுதுவோர் 12 பேர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு பெற்றோர்களின் ஆசி பெற்று தேர்வு எழுத சென்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று 16 ஆயிரத்து 68 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 954 பேரும், தேவகோட்டை கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 637 பேரும், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 477 பேரும் தேர்வு எழுதினர்.
விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 222 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். #Plus2Exam