செய்திகள்

மதவாத சக்திகளுடன் போராட உதவுங்கள்: சரத்யாதவுக்கு லல்லு வேண்டுகோள்

மதவாத சக்திகளுக்கு எதிராக தன்னோடு சேர்ந்து போராடும்படி சரத்யாதவுக்கு, லல்லுபிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார்.

ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்த நிதிஷ்குமார் திடீரென கூட்டணியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த செயலுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலரே எதிர்ப்பாக உள்ளனர். குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சரத்யாதவ், நிதிஷ்குமாரின் முடிவை ஆதரிக்கவில்லை.

இதேபோல கட்சி எம்.பி.க்களும், மூத்த தலைவர்களுமான அலிஅன்வர், வீரேந்திரகுமார் ஆகியோரும் நிதிஷ்குமாருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அதிருப்தியில் உள்ள சரத்யாதவுக்கு மத்திய மந்திரி பதவி வழங்கி அவரை சமரசப்படுத்துவதற்கு பா. ஜனதா மேலிடம் முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் சரத்யாதவை தன்னோடு சேர்ந்து போராடும்படி லல்லுபிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். அவர் இது சம்மந்தமாக நிருபர்களிடம் கூறியதாவது:-

நாம் இருவரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள். இந்த கொள்கைக்காக நாம் இணைந்து போராடி இருக்கிறோம். தற்போது பீகாரில் பாரதீய ஜனதாவும், மதவாத சக்திகளும் மாநிலத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களை மாநில அளவிலும், தேசிய அளவிலும் எதிர்த்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு உதவும்படி சரத்யாதவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT