புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கன்னட மொழி ஆய்வறிஞரும், பிரபல எழுத்தாளருமான எம்.எம்.கல்பர்கி கடந்த 30.08.2015 அன்று தர்வாட் மாவட்டம், கல்யான் நகரில் உள்ள தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்படார். முற்போக்கு சிந்தனையாளரும், நாத்திகருமான கல்பர்கி இந்துத்துவ சக்திகளையும், லிங்காயத் சாதிவெறியர்களையும் கடுமையாக எதிர்த்து எழுதியும், பேசியும் வந்தார்.
இவரது கொலை வழக்கில் உரிய விசாரணை நடைபெறாததால் மத்திய புலனாய்வு முகமைகளான தேசிய புலனாய்வு அமைப்பு அல்லது சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு இதுதொடர்பாக விசாரணை நடத்தி தனது கணவரின் கொலையில் உள்ள மர்மத்தை வெளிப்படுத்த வேண்டும் என மறைந்த கல்பர்கியின் மனைவி உமா தேவி கல்பர்கி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவின்மீது இன்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எழுத்து துறைக்கான நாட்டின் மிக உயர்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்றவரான கல்பர்கி(77) ஹம்ப்பி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தவராகவும் முன்னர் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.